வேலூர் பொற்கோயிலை சுற்றிராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்ததால் பரபரப்பு
வேலூர்:வேலூர் அடுத்த அரியூர் திருமலைக்கோடியில் உள்ள பொற்கோயிலை சுற்றி 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் அடுத்த அரியூர் திருமலைக்கோடியில் பொற்கோயில் உள்ளது. நேற்று மாலை இந்த கோயிலை சுற்றி திடீரென இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன. சிறிது நேரம் வட்டமடித்து சென்ற அந்த ஹெலிகாப்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த போது, வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நாராயணி பீடத்தின் ஆண்டு விழா நடக்கிறது. 7ம் தேதி 7 ரதங்கள் வேலூரில் இருந்து புறப்பட்டு திருமலைக்கோடியை அடைகின்றன. மறுநாள் 8ம் தேதி பழைய நாராயணி கோயிலின் கும்பாபிஷேக விழா நடக்கிறது. இந்த விழாக்களில் பல விவிஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நடந்த பாதுகாப்பு ஒத்திகையாக இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.