வேதாரண்யத்தில் கடல் சீற்றம் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
வேதாரண்யம்:கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.நாகை, தஞ்சை மாவட்ட கடற்கரைகளில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் தினமும் 2,000 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இன்று 3வது நாட்களாக வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 2,000மீனவர்கள் இன்று 3வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. கரையோரம் மீன்பிடிக்கும் ஒரு சில படகுகள் சென்று வந்த நிலையில் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்தன. இதனால் மீன்கள் விலையில் கடும் ஏற்றம் காணப்பட்டது. நேற்று ஷீலா மீன் கிலோ ரூ.800, வாவல் ரூ.600, காலா ரூ.350 என ஏலம் போனது. இருப்பினும் முழு அளவில் மீன்கள் கிடைக்க இன்னும் 10 நாட்கள் ஆகும் என கோடியக்கரை மீனவர் நல உரிமைச் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.இதே போல தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.