சென்னை:காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை காங்கிஸ் சார்பில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில், வடசென்னையை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000ம், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000ம், 9 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3,000ம், 11 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.5,000ம், பாலிடெக்கினிக் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,500ம், மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000ம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
காங்கிரசில் பொறுப்பு வகித்து சிறந்த முறையில் கட்சி பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளை மாவட்ட தலைவரே தேர்ந்தெடுத்து கல்வி நிறுவனங்களின் பெயரில் ஊக்கத்தொகையை காசோலையாக வழங்குவார். இதற்கான நிகழ்ச்சி வரும் 15ம் தேதி மாலை, தண்டையார்பேட்டை டி.எச்.ரோட்டில் உள்ள ஏ.என்.ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும். ஊக்கத்தொகை பெறவிரும்பும் மாணவர்கள் ஜூலை 8ம் தேதிக்குள் வடசென்னை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் ராயபுரம் ஆர்.மனோ தெரிவித்துள்ளார்.