நெல்லை:கூடங்குளம் அருகே கூத்தங்குழியில் இன்று காலை இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். வீடுகளும் சேதமடைந்தன. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. அணு உலை ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.கடந்த 2013 செப்டம்பரில் இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த போது அவை திடீரென வெடித்து பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். போலீசார் சோதனை நடத்த முயற்சித்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை கடலில் வீசி விட்டனர். இதன்பின்னர், இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக அணு உலை ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷ்டியினர் மாறி, மாறி நெல்லை கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் 23ம் தேதி இடிந்தகரை சவேரியார் கோயில் மேற்குப் பகுதியில் இரு கோஷ்டியினரும் திடீரென மோதிக் கொண்டனர். 25க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இன்று காலை கூத்தங்குழி பகுதியில் இருதரப்பினரிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கூத்தங்குழியில் சுதாகர், சிலுவை கித்தேரியன் ஆகியோர் தலைமைகளில் இரு கோஷ்டிகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் ஊரில் நடந்த சடங்கு நிகழ்ச்சியில் இருவரும் மோதிக் கொண்டனர். இன்று காலை, கூத்தங்குழி பாத்திமாநகர் பகுதியில் இரு கோஷ்டியினரும் நாட்டுவெடிகுண்டுகளை வீசினர். சுமார் 50 குண்டுகள் வரை வீசப்பட்டதாக தெரிகிறது. இதில் அதேபகுதியைச் சேர்ந்த மதன் உள்பட 4 பேர் காயமடைந்தனர். அங்குள்ள சில வீடுகளும் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்.பி. நரேந்திரன் நாயர், வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கூத்தங்குழியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.