திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கல் இருந்தது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாகவும், சலுகை விலை மற்றும் வெளிமார்க்கெட் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் தினமும் காத்திருக்கின்றனர். இந்த லட்டு பிரசாதம் உலக புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று திருப்பதி கோயிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பக்தர் தனது குடும்பத்தினருடன் வந்தார். அவர் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரசாத லட்டை வாங்கி கொண்டு குடும்பத்தினருடன் தாங்கள் தங்கியிருந்த எஸ்என்டி பக்தர்கள் ஓய்வு விடுதிக்கு சென்றார். விடுதியில் லட்டு பிரசாதத்தை சாப்பிட எடுத்தபோது அதில் ஒரு கல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கோயிலுக்கு வந்து அந்த லட்டை தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பித்து புகார் செய்தார்.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் நிருபர்களிடம் கூறியதாவது: பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து பக்தியுடன் பிரசாத லட்டுவை வாங்கி செல்கின்றனர். ஆனால் லட்டு செய்யும்போது தேவஸ்தான பணியாளர்கள் அலட்சியமாக இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு முன்பும் லட்டு பிரசாதத்தில் ஆணி மற்றும் மரக்கட்டை துண்டு போன்றவை இருந்துள்ளது. எனவே லட்டு தயாரிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.
தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில் ‘இனிமேல் பிரசாதத்தில் இவ்வாறு கல், ஆணி போன்றவை இருக்காது என உறுதியளித்தனர். இந்த சம்பவம் பக்தர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.