சென்னை:நடிப்புக்கு முழுக்கு என்று நான் எப்போது சொன்னேன் என்று திடீர் பல்டியடித்தார் ரம்யா.‘குத்து' ரம்யா கடந்த ஆண்டு கர்நாடகாவில் எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நடிப்பதை குறைத்துக்கொண்டார். ‘நீர் டோஸ்' என்ற கன்னட படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டவர், பின்னர் நடிக்க மறுத்தார். நடிப்புக்கு முழுக்கு போட்டு சமூக பணியில் ஈடுபடப்போவதாக அவரது தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.
இது பற்றி ரம்யா கூறியது: பள்ளிகளில் நான் விளையாட்டு வீராங்கனையாக பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். அதுபோல் ஒரு கதாபாத்திரம் வந்ததால் தற்போது ‘ஆர்யன்' என்ற படத்தில் நடிக்கிறேன். ‘அரசியலில் இருப்பதால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டீர்களா?' என்கிறார்கள். நான் அரசியல்வாதிதான். அதற்கான பொறுப்புகள் எனக்கு இருக்கிறது. எல்லா நடிகர், நடிகைகளும் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலில் இருப்பதால் நான் ஏற்கும் வேடங்களின் தன்மையையும் பார்க்க வேண்டி உள்ளது. பொறுப்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே இனி ஏற்பேன்.
வயதான பிறகுதான் நிறைய நடிகைகள் அரசியலுக்கு வருகிறார்கள். எனக்கு இன்னும் சினிமாவில் வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது. ஹீரோயின் வேடம் ஏற்கும்போது 60 நாட்கள் ஒட்டுமொத்தமாக கால்ஷீட் தர வேண்டி உள்ளது. அரசியலில் இருப்பதால் அது முடியாது. ஆனால் ஒருபோதும் நடிப்புக்கு முழுக்குபோடுகிறேன் என்று நான் சொன்னது கிடையாது. அரசியல் சூழல்கள் என்னை நிறைய படங்களை ஏற்க முடியாத நிலைக்கு உள்ளாக்கியது. அர்த்தமுள்ள வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு ரம்யா கூறினார்.