பால்கனி சுவர் விழுந்து வாலிபர் படுகாயம்
பெரம்பூர்: வியாசர்பாடியில் வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததில் வாலிபர் பலத்த காயம் அடைந்தார். பைக் சேதம் அடைந்தது. சென்னை வியாசர்பாடி மதியழகன் தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா. இவர் மகன் அப்துல் வகாப் (36). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் வீட்டு வெளியே ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டின் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அப்துல் வகாப் தலை, தோள், முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அங்கு நிறுத்தி இருந்த ஒரு பைக்கும் சேதம் அடைந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அப்துல் வகாப்பை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.