லவ் லெட்டர் தந்து டார்ச்சர் பள்ளி மாணவி விஷம் குடிப்பு
பரமத்திவேலூர்: மோகனூர் அருகே பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து தொல்லை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேதனையில் விஷம் குடித்த மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியின் மாமன் மகன் நவலடி (18), தினந்தோறும் தனது நண்பர்களான விக்னேஷ் (17), சண்முகம் (18) ஆகியோர் மூலம் காதல் கடிதம் கொடுத்து வந்தார். இதனை மாணவி கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடிதம் கொடுத்தபோது, மாணவி அவர்களை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனையடைந்த மாணவி பள்ளியில் விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கினார். உடனடியாக அவரை ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி நவலடி, விக்னேஷ், சண்முகம் ஆகிய மூவரையும் கைது செய்து சேலம் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.