அரியவகை முள் எலி காட்டுக்குள் விடப்பட்டது
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அவாஹில் நல்லப்பன் தெரு பகுதியில் நேற்று உருண்டை வடிவில் பந்து போன்ற ஒரு உருவம் நகர்ந்தது. இதை பார்த்த பீட்டர் என்பவர் அதை எடுத்தார். அது அரிய வகை எலியாக இருக்கும் என நினைத்தார். உடனடியாக வனத்துறையிடம் அதை ஒப்படைத்தார். வனச்சரகர் சிவா, வனவர் பாஸ்கரன், வனகாப்பாளர் லூர்து சாமி ஆகியோர் பார்வையிட்டனர். அவர்கள் கூறியதாவது:இது அரிய வகை உயிரினமான முள் எலி. குளிர் பிரதேசத்தில் இது இருக்காது. எதிரிகளை பார்த்தவுடன் முகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் உள்ளே இழுத்து கொண்டு முற்கள் மட்டுமே வெளியே தெரியும் வகையில் வைத்துக் கொள்ளும். 4 ஆண்டு மட்டுமே வாழும் தன்மையுள்ள இந்த எலி ஆண்டுக்கு 3 முதல் 4 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். இந்த வகை எலி சமவெளி பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் மூலமாக கொண்டு வரப்படும் பொருட்களுக்குள் சிக்கி வந்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முள் எலி மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பர்லியார் வனப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.