பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விளையாட்டு பிரிவு கவுன்சலிங் 449 இடங்கள் நிரம்பின
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் நேற்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் முடிந்தது. இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சலிங் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 571 பொறியியல் கல்லூரிகளில் தற்போது, 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 68 ஆயிரத்து 423 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாணவர் சேர்க்கையின் முதல்கட்டமாக விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் நேற்று முன்தினம் தொடங்கியது. விளையாட்டு பிரிவில் மொத்தமுள்ள 500 இடங்களுக்கு 4,800 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 890 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், நேற்று முன்தினம் 430 பேருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று 460 பேருக்கு கவுன்சலிங் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற விளை யாட்டு கவுன்சலிங்கின் முடிவில் 500 இடங்களில் 449 இடங்கள் நிரம்பின. 51 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. இதில், 6 ஆயிரம் இடங்களுக்கு 400 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில் கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங்கள் தவிர மற்றவை பொதுப் பிரிவில் சேர்க்கப்படும். இதை தொடர்ந்து வருகிற 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 28ம் தேதி வரை 32 நாட்கள் பொதுப் பிரிவுக்கான கவுன்சலிங் நடக்கிறது.