மாயாவதி கட்சி 2 எம்எல்ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தனர்
ஐதராபாத்: தெலங்கானாவில் மாயாவதி கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள், டிஆர்எஸ் பவனில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்னிலையில் இன்று அந்த கட்சியில் இணைந்தனர். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா புதிய மாநிலம் கடந்த 2ம் தேதி உதயமானது. புதிய மாநிலத்தின் முதல் முதல்வராக டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் அன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் ஆகர்ஷ் என்ற பெயரில் புதிய செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அம்சமாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எல்எல்சிக்களை டிஆர்எஸ் கட்சியில் சேர்க்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தெலங்கானாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் சார்பாக சிர்பூர் தொகுதியிலிருந்து கோனேறு கோனப்பா மற்றும் நிர்மல் தொகுதியிலிருந்து அல்லோலா இந்திராகிரண் ரெட்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் டிஆர்எஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. இரண்டு எம்எல்ஏக்களும் நேற்று முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து அவர்கள் கடசி மாறுவது உறுதியானது. இந்நிலையில் டிஆர்எஸ் பவனில் முதல்வர் சந்திர சேகரராவ் முன்னிலையில் இருவரும் முறைப்படி தங்களை டிஆர்எஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி முழுமையாக கலைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ விட்டல் ரெட்டியும் டிஆர்எஸ் கட்சிக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். கட்சி மாறினால் இவர் மீது கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் ஆதரவை மட்டும் தெரிவித்திருப்பதாக டிஆர்எஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆந்திர மாநிலத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 7 எம்எல்சிக்கள் கடந்த வாரம் தெலுங்கு தேசத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.