சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:கல்வி பெறும் உரிமை சட்டப்படி, ஒவ்வொரு பள்ளியிலும் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களிடம், வருமானச் சான்றிதழ் வழங்கும்படி பள்ளி நிர்வாகங்கள் கோரக்கூடாது என்று மெட்ரிக் கல்வித்துறை புதிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. கல்வி பெறும் உரிமையின் நோக்கத்தை அடியோடு தகர்க்கும் வகையில் இந்த ஆணை உள்ளது.ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பின் தங்கிய பிரிவினருக்கும் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதனடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அவ்வாறு இருக்கும்போது பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களிடம் வருமானச் சான்றுகளைக் கோரக்கூடாது என்று அரசு ஆணையிட்டிருப்பதால், அப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பெரும் தொகையை பெற்றுக் கொண்டு பணக்கார மாணவர்களைச் சேர்த்துவிட்டு, அவர்கள் அனைவரும் பின்தங்கிய பிரிவினர் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் பொய்யாக கணக்கு காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.எனவே, முதல் கட்டமாக 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆய்வு செய்து, ஒற்றைச் சாளர முறையில் தகுதியுள்ள மாணவர்கள் சேர்க்கப் படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.