பொறையார் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 32 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் கெட்டுப்போன முட்டை காரணமா?
தரங்கம்பாடி: நாகை மாவட்டம் பொறையார் அருகே உள்ள திருவிடைக்கழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் நேற்று மதியம் 180 மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்பட்டது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் 32 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து அவர்கள் திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார். வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராஜமூர்த்தி தலைமையில் மருத்துவக்குழுவினர் திருவிடைக்கழி பள்ளிக்கு விரைந்து சென்று சத்துணவு கூடத்தை பார்வையிட்டு அங்கியிருந்த உணவு மற்றும் முட்டைகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் ஜனார்த்தனம், தரங்கம்பாடி தாசில்தார் அழகர்சாமி, செம்பனார்கோயில் ஒன்றிய ஆணையர் ரத்தினமாலா ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில், சத்துணவுடன் வழங்கப்பட்ட முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியது. இதனால் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை தூக்கி எறிந்துவிட்டோம். அப்படி இருந்தும் எங்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது என்றனர். இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை கெட்டுப்போனதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.