ரூ15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் கடத்த முயன்ற டிரைவர் கைது
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை போலீசார் பேசின்பிரிட்ஜ் அருகே இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். ஏராளமான பண்டல்கள் இருந்தது. அதுபற்றி கேட்டபோது பிஸ்கட் பாக்கெட் என டிரைவர் கூறினார். சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அனைத்தும் போதை புகையிலை என தெரிந்தது. நான்கரை டன் எடை கொண்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலையை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக லாரியை ஓட்டி வந்த டெல்லியை சேர்ந்த டிரைவர் சத்தம்லாலை (30) கைது செய்தனர். விசாரணையில், சவுகார்பேட்டையில் உள்ள குடோனுக்கு இவைகளை எடுத்து வந்தது தெரிந்தது. பறிமுதல் செய்த புகையிலையை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் இளங்கோ, சிவசங்கரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கைப்பற்றி கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டி அழித்தனர்.