மொகாலி:பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே நர்சிங் கல்லூரி மாணவிகள் இரண்டு பேரை துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம் செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகே குராலியில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவிகள் கடந்த 27ம் தேதி கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சிஸ்வான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு காரில் வந்த 6 இளைஞர்கள் மாணவிகளை வழிமறித்தனர். சத்தம் போட முயன்ற மாணவிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டினர். ஒரு இளைஞன் மாணவியின் காலுக்கு அருகே துப்பாக்கியால் சுட்டான். இதனால் அச்சம் அடைந்த மாணவிகள் இளைஞர்கள் சொன்னபடி காரில் ஏறினர். அவர்களை சிஸ்வான்-பட்டி சாலையில் உள்ள பண்ணை வீட்டுக்கு 6 இளைஞர்களும் அழைத்து சென்றனர். மறுநாள் வரை அவர்களை அடைத்து வைத்து பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்களை கல்லூரி அருகே கொண்டு போய் விட்டனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி சென்றனர்.
மாணவிகளும் இந்த சம்பவத்தை உடனடியாக யாரிடமும் கூறவில்லை. இதற்கிடையில் இதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 25ம் தேதி சண்டிகரில் மர்மநபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து அந்த மாணவி போலீசில் புகார் கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவி படித்த நர்சிங் கல்லூரியில் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டதை பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் போலீசாரிடம் தெரிவித்தனர். தங்களை பலாத்காரம் செய்தவர்கள் பற்றிய அடையாளங்களையும் தெரிவித்தனா.
விரைந்து செயல்பட்ட போலீசார் பல்விந்தர் சிங், தல்விந்தர் சிங், குர்பிரித் சிங் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மாணவிகளை கடத்த பயன்பட்ட மாருதி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லல்லி, பர்னி, பம்மா ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதில் லல்லி என்பவர் தான் மாணவியின் கால் அருகே துப்பாக்கியால் சுட்டவன். அவன் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சண்டிகர் மாணவி பலாத்கார வழக்கில் இன்னும் துப்பு கிடைக்கவில்லை.