தீவிரவாதிகள் சதி எதிரொலி ரஷ்யா செல்லும் விமானங்களில் ஜெல் எடுத்து செல்ல தடை அமெரிக்கா அதிரடி உத்தரவு
வாஷிங்டன்:குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தீவிரவாதிகள் சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி உள்ள தகவல் வெளியானதை அடுத்து, ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட், ஜெல், ஷேவிங் கிரீம் ஆகியவற்றை கொண்டு செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கின்றன. ஏற்கனவே இந்த போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் செசன்யா தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகின் றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். எனவே குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ரஷ்யா முழுவதும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தீவிரவாதிகள் டூத் பேஸ்ட் மூலமாக வெடி மருந்துகளை கொண்டு சென்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க சதி செய்யலாம் என அமெரிக்க உளவுத் துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில் பயணிகள் டூத் பேஸ்ட், ஜெல், ஷேவிங் கிரீம் உள்ளிட்ட திரவ பொருட்கள், பவுடர் வடிவிலான பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் பல்வேறு வகைகளிலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.