கேப்சூலில் அடைத்து வாலிபர் விழுங்கிய தங்கத்தை எடுக்கும் முயற்சி தோல்வி ஆபரேஷன் செய்ய திட்டம்
திருவனந்தபுரம்:துபாயில் இருந்து 350 கிராம் தங்கத்தை கேப்சூலில் அடைத்து விழுங்கி கடத்தி வந்த வாலிபரின் வயிற்றில் இருந்து தங்கத்தை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் 5 நாட்களாக அவர் அவதிப்பட்டு வருகிறார்.தங்கத்துக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து துபாய், குவைத் உள்பட பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கோழிக்கோடு, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் வழியாக அதிக அளவில் தங்கம் கடத்தப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்த விமான நிலையங்கள் வழியாக 70 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து அடிக்கடி கடத்தல் தங்கத்தை சுங்க இலாகாவினரும், வருவாய் புலனாய்வுத் துறையினரும் பிடித்து வருகின்ற போதிலும் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு தங்கத்தை கடத்தி வருகின்றனர். இந்நிலையில் காசர்கோட்டை சேர்ந்த வாலிபர் தங்கத்தை கேப்சூலாக்கி விழுங்கி கடத்தி வந்து தற்போது சிக்கலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார்.
காசர்கோடு அருகே உள்ள உதுமா தச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (35). துபாயில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2ம் தேதி அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மங்களூர் விமான நிலையம் வந்தார். விமானத்தில் வரும் பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க இலாகாவினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து சுங்க இலாகாவினர் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் யாரிடம் இருந்தும் தங்கம் எதுவும் சிக்கவில்லை.
இந்நிலையில் சசிதரனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரை மீண்டும் பரிசோதித்தனர். அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய பரிசோதனையில் அவர் 350 கிராம் தங்கத்தை கேப்சூலில் அடைத்து விழுங்கியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை மங்களூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர்.
வயிற்றுப் போக்குக்கான மருந்தை கொடுத்து தங்கத்தை வெளியே எடுக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். ஆனால் 5 நாட்கள் ஆகியும் கேப்சூல்கள் வெளியே வரவில்லை. வயிற்றுக்குள் பல நாட்களாக கேப்சூல்கள் இருப்பதால் சசிதரனுக்கு உடல்நலக் குறைவும் ஏற் பட்டுள்ளது. இதனால் வயிற்றை ஆபரேஷன் செய்து தங்கத்தை வெளியே எடுக்கலாமா என்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.