தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி தமிழக கடலோர பகுதியில் மேலும் 30 காவல் நிலையங்கள் ஏடிஜிபி தகவல்
கன்னியாகுமரி:தமிழகத்தில் மேலும் 30 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.
இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலோர கிராமங்கள் வழியாக பைக் பிரசார பயணம் கடந்த 1ம் தேதி சென்னையில் இருந்து தொடங்கியது. கன்னியாகுமரியில் இந்த பயணம் நேற்று நிறைவடைந்தது. பிரசார பயணத்தில் வந்தவர்களுக்கு ஏடிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் மீனவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு விழிப்புணர்வு பைக் பயணம் நடந்தது. அடுத்ததாக சென்னையில் இருந்து கடல் வழியாக பாய்மர கப்பலில் 12 நாட்கள் 1000 கி.மீ தூரத்தை கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்ற 20 பேர் கமாண்டோ பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு 12 காவல் நிலையங்கள் உள்ளன. கூடுதலாக 30 காவல் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் கடலோர பகுதிகளில் 20 கி.மீட்டருக்கு ஒரு காவல் நிலையம் என்ற நிலை உருவாகும். கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு தற்போது 24 படகுகள் உள்ளன. கூடுதலாக 20 படகுகள் விரைவில் வாங்கப்படும். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் அச்சுறுத்தல் உள்ளது. மீனவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து காவல் துறைக்கு உதவ வேண்டும்.