வளைகுடா நாடுகளின் சிறைகளில் 3500 இந்தியர்கள் தவிப்பு மத்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி:வளைகுடா நாடுகளின் சிறைகளில் மொத்தம் 3500 இந்தியர்கள் அடைபட்டிருப்பதாக மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா உள்ளிட்ட வளை குடா நாடுகளில் சிறைபட்டிருக்கும் இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் வயலார் ரவி நேற்று மாநிலங்களவையில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அளித்த புள்ளிவிவரத்தின் படி அந்நாட்டு சிறைகளில் மொத்தம் 3497 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் சிறையில் 1400 இந்தியர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் 1025 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் ஜெட்டா சிறையில் 568 இந்தியர்கள் தவித்து வருகின்றனர்.
இது தவிர குவைத்தில் 250, ஓமன் நாட்டில் 106, கத்தாரில் 72, பஹ்ரைனில் 76 இந்தியர்கள் சிறைபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விசா முறைகேடு தொடர்பான குற்றங்களுக்காக கைதானவர்கள். போதை மருந்து கடத்தல், கொலை, பலாத்காரம் ஆகிய குற்றங்களுக்காக கைதானவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட உதவி கிடைக்க அங்குள்ள இந்திய தூதரகங்கள் உதவி வருகின்றன.
வழக்கை விரைந்து நடத்தவும், தண்டனையை குறைப்பது தொடர்பாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகங்களுக்கு இந்திய தூதரகம் வாயிலாக தொடர்ந்து கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு வயலார் ரவி கூறினார்.