பல்லடம்:பல்லடம் அருகே மிள்காய் பொடியை தூவி கோவை நகை கடை ஊழியர் மகனிடம் ரூ.4.5 லட்சம் கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை டவுன் ஹாலில் நகைக் கடை நடத்தி வருபவர் ரமேஷ். இவரது மகன் வினித் (17). இவர்களிடம், உக்கடம் பகுதியை சேர்ந்த சித்திக், செல்வபுரம் ஆறுமுகம் ஆகிய இருவரும் வேலை பார்த்தனர். கடந்த 3ம் தேதி பல்லடத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர், ரமேசுக்கு போன் செய்து, எங்களது நகையை ரூ.4.5 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளோம். அந்த நகையை திருப்பி அதிக விலைக்கு விற்றுத் தாருங்கள் என்று கூறி உள்ளார். அவருடைய பேச்சை நம்பிய ரமேஷ், அவரிடம் வேலை பார்க்கும் சித்திக், ஆறுமுகம் மற்றும் ரமேஷின் மகன் வினித் ஆகிய மூவரிடமும் ரூ4.5 லட்சம் பணத்தை கொடுத்தார்.
அவர்கள் அனைவரும் காரில் பல்லடம் பஸ் நிலையம் வந்தனர். அங்கு பைக்கில் ஒரு பெண்ணுடன்மர்ம நபர் வந்தார். அடகு வைத்த நகையின் ரசீது என் நண்பரிடம் உள்ளது. நீங்கள் என் பின்னால் காரை எடுத்து வாருங்கள். நண்பனிடம் ரசீதை வாங்கலாம் என வினித்திடம் கூறியுள்ளார். அதன்படி மூவரும் காரில் பின் தொடர்ந்தனர். பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் 3 கிமீ தொலைவு சென்றவுடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றார். அங்கு வினித் உள்பட 3 பேரும் காத்திருந்தனர்.
சிறிது நேரம் கழித்து திடீரென அந்த மர்ம நபர் 5 பேருடன் திரும்பி வந்து காரில் அமர்ந்திருந்த வினித், சித்திக், ஆறுமுகம் கண்களில் மிளகாய் பொடியை வீசினார். பிறகு 3 பேரையும் தாக்கிவிட்டு ரூ.4.5 லட்சத்தை பிடுங்கிக் கொண்டு தப்பினர். புகாரின்படி பல்லடம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சிக்கந்தர் (28), முக்தர் அலி (29), சாதிக் (25), ஷேக் படிதர் (24) ஞானசேகரன் (29) தமிழரசன் (29) ஆகிய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.