பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றால்தான் பேச்சுவார்த்தை தலிபான்கள் நிபந்தனை
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் தலிபான்கள் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண, தலிபான்களுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளின் பெயரையும் வெளியிட்டார். அதை ஏற்ற தீவிரவாதிகள் தங்கள் இயக்க தலைவர் மவுலானா அப்துல் ஆசிஸ் உள்பட 3 பேரை அறிவித்தனர். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தையை அரசு ஒத்திவைத்தது.
அமெரிக்காவின் நெருக்கடி காரணமாகவே பேச்சுவார்த்தையை அரசு ஒத்தி வைத்துள்ளதாக தலிபான்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வாபஸ் பெற வேண்டும். அப்போதுதான் அமைதி பேச்சில் பங்கேற்போம் என்று தலிபான் தீவிரவாதிகள் திடீர் நிபந்தனை விதித்துள்ளனர்.அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் இன்று அல்லது நாளை அமைதி பேச்சு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தலிபான்கள் நிபந்தனை விதித்துள்ளதால் பேச்சுவார்த்தையில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.