கவுகாத்தி:பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐயுடன் மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக அசாம் முதல்வர் தருண் கோகய் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் சட்டீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னை உள்ளது. அசாமில் உல்பா தீவிரவாதிகள் பிரச்னை உள்ளது. தற்போது உல்பா தீவிரவாதிகளில் ஒரு பிரிவினர் அரசுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அசாமில் மாவோயிஸ்ட்கள் இயக்கம் வேரூன்றி வருவதாகவும், பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் மாநில முதல்வர் தருண் கோகய் மத்திய அரசை எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
வட மாநிலங்களில் காலூன்றி உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தினர் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுடனும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு மாநிலத்தில் தங்கள் இயக்கத்தை பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பல முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அசாமில் 9 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் பரவி உள்ளனர்.
பிரிவினைவாத இயக்கங்களுக்கும் மாவோ இயக்கத்துக்கும் கொள்கை அளவில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கம் இருவருக்கும் பொதுவாக உள்ளது. இந்தியா அவர்களது பொது எதிரி. மாவோயிஸ்ட் பிரச்னையை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என மத்திய அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. இவ்வாறு தருண் கோகய் கூறினார்.