ஐந்து ஆண்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை 10 கோடி உயர்வு
புதுடெல்லி:வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மாநில வாரியாக கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 2009 மக்களவை தேர்தல் வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில் 2014 வாக்காளர் பட்டியலில் 9.7 கோடி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 13.5 சதவீதம் அளவுக்கு வாக்காளர் பட்டியலில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 29.3 சதவீதம் அளவுக்கு வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அரியானாவில் 28 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 25 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 19 சதவீதமும் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களில் வாக்காளர் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உ.பி. முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 13.44 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 7.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2004&09 வரையிலான 5 ஆண்டு காலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4.6 கோடி அளவுக்கு தான் உயர்ந்தது. தற்போது இரண்டு மடங்கு அளவுக்கு வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.