திருப்பதி:ஆந்திராவில் இன்று காலை ஆட்டோ மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தப்பியோடிய லாரி மற்றும் ஆட்டோ டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் பூத்பூர் மண்டலம் அமிதாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனு(40), விவசாய கூலி தொழிலாளி. இவரது உறவினர் இல்ல திருமணம் இன்று காலை நடைபெற்றது. இதனால் இவர் தனது மனைவி வெங்கடம்மா (35), மாமியார் சுசீலா (60) மற்றும் 2 மகன்களுடன் திருமணத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி 5 பேரும் அம்ராபாத் மண்டலம் வந்தேஸ்வரம் கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை ஆட்டோவில் புறப்பட்டனர்.
அச்சம்பேட்டை அருகே உள்ள ஜெ.எம்.ஜெ. அரசு பள்ளி அருகே காலை 8 மணியளவில் வந்த போது எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி, ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பயணம் செய்த சீனு, வெங்கடம்மா, சுசீலா மற்றும் 2 மகன்கள் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்ததும் ஆட்டோ டிரைவர் தப்பியோடி விட்டார்.
தகவலறிந்த அச்சம்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரலு மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மெகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாசில்தார் ஜோதியும் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அச்சம்பேட்டை போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மற்றும் தலைமறைவாகி விட்ட ஆட்டோ டிரைவர் ஆகியோரை தேடி வருகின்றனர்.இன்று அதிகாலை உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்ற போது ஆட்டோ மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.