திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருப்பதி, திருச்சானூர், திருமலையை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் பல ஆண்டுகளாக தனி தரிசனத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி 2ம் தேதி உள்ளூர் பக்தர்கள் ஆயிரம் பேருக்கு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தரிசன அனுமதி என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள ரூ.50க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் செல்லும் வரிசையில் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டு கொண்டு வந்த உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் எம்.பி. சிந்தாமோகனும் வரிசையில் நின்று தரிசனத்துக்கு சென்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை, டெல்லி, மும்பை, என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உலகில் பல்வேறு இடங்களில் இருந்தும் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் திருப்பதியை சேர்ந்த மக்கள் தரிசனத்துக்கு செல்வதில் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எனவே 30 ஆண்டுகளாக செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டு வந்தோம். தற்போது அறங்காவலர் குழுவும், தேவஸ்தான தலைமை செயல் அலுவலரும் திருப்பதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தரிசனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளூர் பக்தர் ஒருவர் கூறுகையில், கூட்டம் காரணாக வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டு வந்தது. தற்போது உள்ளூர் மக்களுக்கு என தனியாக தரிசனத்திற்கு அனுமதி வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் முதல்கட்டமாக ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் லட்டு பிரசாதம் வழங்கவில்லை. இலவச லட்டு அல்லது ரூ.10 விலையில் ஒரு லட்டு வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.