ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேலு (30). இவர், ஆரணியில் செல்போன் கடை நடத்தினார். இவர், கடந்த 4 வருடத்துக்கு முன்பு கலைவாணி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு தீபக்குமார் (2) என்ற மகன் இருக்கிறான். திருமணத்துக்கு கலைவாணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலுவுக்கும் கலைவாணியின் உறவினர்களுக்கும் பகை இருந்து வந்ததாகவும் தெரிகிறது.நேற்றிரவு 10.30 மணிக்கு செல்போன் கடையை பூட்டிய வேலு, அங்கிருந்து பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். ஆரணி அருகே உள்ள திருநிலை கிராம பகுதியில் வரும்போது அவரது பைக்கை ஓரு கும்பல் மறித்து நிறுத்தியுள்ளது.
பிரச்னை ஏற்படபோகிறது என்பதை உணர்ந்துகொண்டு வேலு, பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அந்த கும்பல் சுற்றிவளைத்து, வேலுவை சரமாரி வெட்டி உள்ளனர். தலை, கை, காலில் பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதன்பிறகு கும்பல், வேலு உடலை ரோட்டோரமாக உள்ள வயல்வெளியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். கொலைகாரர்கள் பைக்கில் தப்பி சென்றதாக தெரிகிறது.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி குமரவேல், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வயல்வெளியில் கிடந்த வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வயல்வெளியில் கிடந்த ரத்தக்கறை படிந்த அரிவாளை கைப்பற்றி உள்ளனர். மோப்ப நாய் வந்து, வேலு வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ஓடி வயல்வெளி பகுதியில் மோப்பம் பிடித்து அங்கேயே நின்றுவிட்டது. இந்த கொலை சம்பந்தமாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொலைக்கு கலைவாணியின் உறவினர்கள் பின்னணி உள்ளதா, தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதுசம்பந்தமாக கிருஷ்ணாபுரம் கண்டிகை பகுதியை சேர்ந்த 9 பேரை பிடித்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.