வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை நேற்று முடிவெடுத்திருக்கிறது. அத்துடன், காஸ் மானியத்தை வங்கி மூலம் நேரடியாக செலுத்தும் திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும் இது நல்ல முடிவு.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டரின் தற்போதைய சந்தை விலை ரூ.1,021. இவை மத்திய அரசின் மானிய உதவியில் பாதிக்கும் குறைவான விலையில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசுக்கு மானியச் சுமை அதிகரித்து வரவே, சிலிண்டர் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்தது. ஒரே தவணையில் அதிக விலை ஏற்றினால் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், மத்திய அரசு வேறொரு வழியை கையாண்டது.
முதல் கட்டமாக, மானிய விலை சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க திட்டமிட்டது. இதற்காக எண்ணெய் நிறுவனங்களிடம் மானிய நிதியை அளிப்பதற்கு பதில், மக்களுக்கே நேரடியாக வங்கி மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அமல்படுத்தியது. இதன்படி, சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையான ரூ.435, வங்கி கணக்கு மூலம் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இதில் முறைகேடு வராமல் தடுக்க ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கைக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த நிதி திரட்ட வேண்டிய நிலையில் மானியச்சுமையை குறைக்க முயற்சிப்பது சரியான நடவடிக்கைதான். எனவே, மானிய உதவியில் தரப்படும் காஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் பெற்று டீக்கடை, ஓட்டல்களில் பயன்படுத்துவதை தடுக்க நேரடி மானிய திட்டம் கொண்டு வந்தது சரியான அணுகுமுறைதான். ஆனால், அதை முறையாக செயல்படுத்த திட்டமிடவில்லை. பல மாநிலங்களில் ஆதார் அடையாள அட்டை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. நூறு சதவீதம் ஆதார் அட்டை வழங்கப்பட்ட பின்பே நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும்.
அதே போல், ஒரு குடும்பத்துக்கு எத்தனை சிலிண்டர் வேண்டுமானாலும் பெறலாம் என்றிருந்ததை, திடீரென ஆண்டுக்கு வெறும் 9 சிலிண்டர்தான் என கட்டுப்பாடு விதித்ததும் முறையற்றது. அதிலும் படிப்படியாக கட்டுப்பாடு கொண்டு வந்திருக்க வேண்டும். இதை இப்போதாவது மத்திய அரசு உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.