வாஷிங்டன்:தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங், ஒரு வார அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்துள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின் மன்மோகன் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், இந்தியாவுடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உறவு குறித்து விவாதித்தேன். பாகிஸ்தான் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்தும், இந்திய எல்லையில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்தும், அதனால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினோம்.
நவாஸ் ஷெரிப்பை சந்தித்து பேச ஆவலாக உள்ளேன். அதே நேரத்தில் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் காரணமாக நவாசுடன் பேச சிறிது தயக்கம் ஏற்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்று கிழமை) நவாஸ் ஷெரிபை சந்தித்து பேசுகிறேன். பேச்சு வார்த்தையின் மூலம் தீவிரவாத செயல்களுக்கு சுமூக முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்றும் நம்புகிறேன்.
இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம், அணுசக்தி, ராணுவம், தொழில் நுட்பம் ஆகிய பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சிரியா, ஈரான் விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் கூறினார்.
அதன்பின் ஒபாமா கூறுகையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்று மன்மோகன் விரும்புகிறார். அமெரிக்காவுக்கு நெருக்கமான நட்பு நாடு இந்தியா. பல்வேறு துறைகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்றார். இந்த சந்திப்புக்கு பின் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது, துணை கண்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க தொடர்ந்து கூட்டாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா அமெரிக்கா இடையில் அணுசக்தி துறையில் முதல் முறையாக வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
இதன் மூலம் இந்தியாவில் புதிய அணுமின் நிலையங்களை அமெரிக்க நிறுவனம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஐநா மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசும் போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஐநா தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை நவாஸ் & மன்மோகன் சிங் சந்தித்து பேச உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசலில் வரவேற்ற ஒபாமா
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க சென்றார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி வெள்ளை மாளிகையில் கீழே இறங்கி வந்து புன்னகையுடன் மன்மோகன் சிங்கை ஒபாமா அழைத்து சென்றார். வெளிநாட்டு தலைவர்கள் வெள்ளை மாளிகை வரும் போது, அதிபர் தானாகவே சென்று அழைத்து செல்வது மிகவும் அரிதான ஒன்று. ஆனால், இந்திய பிரதமர் மன்மோகன் மீது ஒபாமா வைத்துள்ள மரியாதையால் அவரே வெளியில் சென்று அழைத்து சென்றார் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.