சென்னை:‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணியில் இறங்கியிருக்கிறார் கமல். ‘விஸ்வரூபம் பார்ட் 2’ முடிப்பதில் மும்முரமாக இருக்கிறார் கமல். ‘விஸ்வரூபம்’ முதல்பாகம் தந்த வெற்றி, 2&ம் பாகத்தின் வேகத்தை கூட்டியது. இந்நிலையில், சமீபகாலமாக கமலின் மனதில் ‘மருத நாயகம்’ நிழலாட ஆரம்பித்திருக்கிறான். 18&ம் நூற்றாண்டின் போராளி மொஹமத் யூசுப் கான் வரலாற்றை மையமாக வைத்து இதன் ஸ்கிரிப்டை அமைத்திருந்த கமல், தானே தயாரித்து இயக்க திட்டமிட்டார். பெரும் எதிர்பார்ப்புடன் 1997&ம் ஆண்டு இங்கிலாந்து ராணி சென்னைக்கு வந்து தடபுடலான விழாவில் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். ஆனால், தொடங்கிய வேகத்திலேயே படம் திடீரென்று கைவிடப்பட்டது. அந்த காலத்திலேயே இப்படத்தை தயாரிக்க ரூ.50 கோடி செலவாகும் என்று கூறப்பட்டது.
இதற்கு பைனான்ஸ் உதவி செய்வதாக கூறிய வெளிநாட்டினர் சிலர், திடீரென்று பின்வாங்கியதால் படம் தடைபட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘விஸ்வரூபம்’ படத்தின் வெற்றி, வெளிநாட்டு பைனான்சியர்களை மீண்டும் யோசிக்க வைத்துள்ளது. ‘மருதநாயகம்’ படத்தை தொடங்கும்படியும் தாங்கள் பைனான்ஸ் செய்ய தயாராக இருப்பதாகவும் கமலுக்கு நம்பிக்கை ஊட்டி உள்ளனர். இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத கமல், ‘மருதநாயகம்’ தொடங்குவது பற்றி அவர்களுடன் பேசி வருகிறார். இந்த படத்தை எடுத்து தனது ரசிகர்களுக்கு விருந்து படைக்க கமல் எண்ணி இருப்பதாக கூறப்படுகிறது.