செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் மண்டப மேற்கூரை இடிந்தது பக்தர்கள் அதிர்ச்சி
சீர்காழி:சீர்காழி அடுத்த பிரசித்தி பெற்ற செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் சண்முக பிரசார மண்டப மேற்கூரை இடிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசித்தி பெற்ற செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாத சுவாமி சமேத தையல் நாயகி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு சுவடிகள் மூலம் நாடி ஜோதிடம் பார்ப்பதும் பிரபலம். கோயில் மேற்கு கோபுர வாசல் நுழைவு வாயிலில், வசந்த மண்டபம் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழாவில் வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்பாள் எழுந்தருளி 10 நாள் உற்சவம் நடைபெறும். கோடை வெப்பம் தணிக்க வசந்த மண்டபம் அருகேயுள்ள சண்முக பிரசார மண்டபத்தில் 4 புறங்களிலும் தண்ணீர் தேக்கப்பட்டு அதில் இருந்து சுவாமிகளுக்கு குளிர்ந்த காற்று வீசும்.
இந்நிலையில் சண்முக பிரசார மண்டப மேல் தளத்தின் சில இடங்களில் சிறிது சிறிதாக காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதையடுத்து தற்காலிகமாக சீரமைப்பு பணி நடந்தது. அந்த இடத்தில் தேக்கு மரங்களால் முட்டுக் கொடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி நள்ளிரவு மண்டபத்தின் வலது புறம் 45 அடி நீளம் மேல்தளம் இடிந்து விழுந்தது. நள்ளிரவில் நடந்ததால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் 2 தினங்கள் முன்பு பெய்த கனமழையில் தண்ணீர் இறங்கியதில், சண்முக பிரசார மண்டபத்தின் இடது பக்க மேல் தளம் நேற்று திடீரென 20 மீட்டர் நீளம் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மண்டபத்தில் மேல்தளம் அடுத்தடுத்து பெயர்ந்து விழுவதால் உடனடியாக ஆய்வு செய்து, பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.