குஜராத் மாநிலத்தில் மாருதி ஆலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
ராஜ்கோட்:குஜராத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கி, மாருதி ஆலை அமைக்க அப்பகுதி விவசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் மண்டல் பஜராச்சியில் சுமார் 44 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அங்கு ரூ.4 ஆயிரம் கோடியில் மாருதி கார் உற்பத்தி நிறுவன ஆலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதற்கு 44 கிராம விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக சேவகர் கனுபாய் கல்சாரியா தலைமையில் சுதந்திர தினத்தன்று போராட்டத்தில் குதித்தனர். கிராமங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக அங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் கார் உற்பத்தி ஆலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2015ல் இந்த ஆலையில் இருந்து சுமார் 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய போவதாக மாருதி நிறுவனம் அறிவித்திருந்தது.