புதுடெல்லி:மும்பையில் வெடிவிபத்தில் சிக்கிய நீர்மூழ்கி கப்பலில் மீட்பு பணி மேற்கொள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக உலக நாடுகள் அறிவித்துள்ளன.மும்பை துறைமுகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்ஏ சிந்து ரக்ஷக் என்ற நீர்மூழ்கி போர் கப்பல் சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராமல் வெடித்து சிதறியது. கப்பலில் இருந்த தமிழக அதிகாரி உள்பட 18 வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீர்மூழ்கி கப்பலில் சிக்கி பலியான வீரர்களின் உடல்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடையாளம் தெரியாத அளவு கருகிய நிலையில் இருந்த 5 வீரர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் சிக்கியும், வெடிவிபத்து காரணமாக உள்பகுதிகள் உருகியும் போயுள்ளதால் அவற்றை திறப்பதற்கு முறையான பயிற்சி பெற்ற நிபுணர்கள் யாரும் இல்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நீர்மூழ்கி கப்பலை மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தால் தான் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்து நிகழ்ந்த உடனேயே மீட்பு பணிக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. மீட்பு பணியில் இந்தியாவோடு சேர்ந்து செயல்பட தயாராக இருப்பதாக உலக நாடுகள் அறிவித்துள்ளன. நீர்மூழ்கி கப்பலை துறைமுகத்துக்கு கொண்டு வரவும், இறுகி உள்ள கதவுகளை உடைத்து கப்பலுக்குள் சென்று ஆய்வு நடத்தவும் பயிற்சி பெற்ற நிபுணர்களையும், தகுதி வாய்ந்த வீரர்களையும் அனுப்பி உதவ தயாராக இருப்பதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கடற்படை தலைமை தளபதி சி.கே.ஜோஷி கூறுகையில், நீர்மூழ்கி கப்பலை மீட்பது குறித்து சர்வதேச நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் உலக நாடுகளின் உதவியை கோர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.