கர்நாடக மக்களவை இடைத்தேர்தல் காங்கிரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு
பெங்களூர்:கர்நாடக மாநிலத்தில் 2 மக்களவை தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி ஆதரவு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் ரூரல் மற்றும் மாண்டியா மக்களவை தொகுதிகளின் மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.பி.க்கள், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றனர். இதையடுத்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இந்த 2 தொகுதிகளுக்கு வரும் 21&ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ஊரக தொகுதியில் டி.கே.சுரேஷ், மாண்டியா தொகுதியில் நடிகை ரம்யா ஆகியோர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்றனர்.
பெங்களூர் ஊரக தொகுதியில் உள்ள சென்னபட்னா சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சி.பி.யோகேஷ்வர். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இவர், கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 5 முறையாக தொகுதியை தக்கவைத்து கொண்டுள்ளார்.
பெங்களூர் மக்களவை தொகுதியில் சென்னபட்னா மிகப்பெரிய சட்டசபை தொகுதியாகும். இங்கு சமாஜ்வாடி கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் யோகேஷ்வரின் ஆதரவை பெறுவதில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
இதுதொடர்பாக சமாஜ்வாடி தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் யோகேஷ்வர் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு மேலிடம் உத்தரவிட்டதை தொடர்ந்து பெங்களூர் ஊரக தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போவதாக யோகேஷ்வர் தெரிவித்துள்ளார்.