சென்னை:சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய,விடிய கொட்டி தீர்த்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசான மழை காணப்பட்டது. நேற்றிரவு பல இடங்களில் கனமழை பெய்தது. இன்றும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைபெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி மற்றும் பழங்கள் வாங்க வந்த சிறு வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டனர். காஞ்சிபுரம், மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், திருவள்ளூர், திருத்தணி, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு கோயம்பேட்டிற்கு வந்த லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்குவதிலும் சுமைதூக்கும் தொழிலாளிகளும் அவதிப்பட்டனர்.
காலையில் பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் மழையில் நனைந்தபடியே சென்றனர். நடைபாதை வியாபாரிகளும் தங்களது கடைகளை திறக்கவில்லை. காலை முதலே மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெளியூர்களுக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும், பெருங்களத்தூர் பஸ் நிறுத்தத்திற்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வந்த பயணிகள் மழையால் சிரமப்பட்டனர். பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழையினால் குண்டும்&குழியுமாக மாறிய இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். சில பகுதிகளில் மழையால் சாலைகள் தூர்ந்து ஜல்லி கற்கள் சிதறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், வளிமண்டலத்தின் மேல்அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் கன மழை நீடிக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழை காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் 21.4 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 5.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.