கூடலூர்:நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா, நாடுகானி, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரியும், வனத்துறையினரை கண்டித்தும் இன்று முழு கடையடைப்பு நடக்கிறது.
தேவாலா, நாடுகானி, மரப்பாலம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுபோல் தனியார் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் நடக்கும் இக் கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவாலா, நாடுகானி, மரப்பாலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த 2 மாதமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்த யானைகளால் வீடுகள், விவசாய ந¤லங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களிலும் பணிக்கு செல்ல முடியவில்லை.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் பலமுறை காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியும் அவை மீண்டும் கிராமப் பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. பல பகுதிகளில் அகழிகள் அமைத்தும் கூட யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
காட்டு யானைகள் வனப் பகுதிகளை விட்டு வெளியேறி கிராமப் பகுதிகளுக்குள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மதியம் கண்டன ஆர்ப்பாட்டமும், பொதுக் கூட்டமும் நடக்கிறது.