உலக தடகள போட்டி அதிவேக மனிதரானார் போல்ட்
14வது உலக தடகள போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வருகிறது. உலகின் அதிவேக மனிதர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டபோட்டி நேற்று நடந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டி முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் மீதே அனைவரின் பார்வையும் இருந்தது.
போல்ட் உள்பட தலைசிறந்த 8 வீரர்கள் இதில் பங்கேற்றனர். போட்டி தொடங்கும்போது மழை கொட்டியது. ஈரமான மைதானத்தில் போட்டி தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்த இந்த போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஜமைக்காவின் உசேன் போல்ட் முதலிடம் பிடித்து உலகின் அதிவேக மனிதர் ஆனார். அவர் 9.77 வினாடிகளில் கடந்து தங்கபதக்கத்தை சுவைத்தார். 2வதாக அமெரிக்காவின் ஜஸ்டின் ஹேட்லின் 9.85 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். ஜமைக்காவின் நெஸ்டா கார்டர் 9.95 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார். 26 வயதான போல்ட் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.
தங்கபதக்கம் வென்றது தனக்கு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் நான் இன்னும் சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். அரையிறுதி போட்டிக்கு பின்னர் எனது கால் சோர்வடைந்து விட்டது. அது ஏன் என்பது தெரியவில்லை. இதனால் உலக சாதனை படைக்க முடியாமல் வெற்றியோடு முடிந்துவிட்டது என்று உசேன்போல்ட் கூறினார்.