மும்பை செல்லும் விமானத்தில் பாலிவுட் நடிகர் பூமன் இரானியை சந்தித்தார் பிரியாமணி. ரயில் சினேகம்போல் இவர்களது சினேகம் மலர்ந்துவிட்டது. வழி நெடுகிலும் அவருடன் பேசி பொழுதை கழித்த பிரியாமணி, ‘உங்களுடனான சந்திப்பு அருமை. இத்தனை நாள் உங்களை சந்திக்காமல் இருந்துவிட்டேனே என ஏக்கத்துடன் டுவிட்டரில் மெசேஜ் போட்டிருக்கிறார்.
பிரகாஷிடம் திடீர் மாற்றம்
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது காதலியான பாடகி சைந்தவியை சமீபத்தில் மணந்தார். ஒரே துறையில் இருந்தாலும் சினிமா பற்றி இருவரும் அதிகம் பேசிக்கொள்வதில்லையாம். அது இப்போதும் தொடர்கிறதாம். முன்பெல்லாம் ரெக்கார்டிங் தியேட்டரில் வேலையை தொடங்கினால் இரவு வெகுநேரம் ஆனாலும் வீட்டுக்கு செல்லமாட்டார். இப்போது அவரிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரவு 10 மணி ஆனதும் மனைவி சைந்தவியிடம் இருந்து ‘வீட்டுக்கு புறப்பட்டாச்சா என போன்வந்து விடுகிறதாம். இதனால் நள்ளிரவுக்கு மேல் இசை அமைக்கும் பணியை குறைத்துக்கொண்டிருக்கிறார் பிரகாஷ்.
பங்களாவுக்கு அம்மா பெயர்
‘சிங்கம் 2 படத்தை முடித்த கையோடு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் இப்படத்தின் கதையில் சர்ச்சை எழுந்ததால் புதிய ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் தொடங்குவதற்குள் வேறு படத்திற்கு சூர்யா தாவிவிடுவாரோ என்ற சந்தேகமும் வலுக்கிறது. இவர் தி.நகரில் தனது பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு பின்னால் ஆடம்பர பங்களா கட்டி இருக்கிறார். இந்த வீட்டுக்கு தனது அம்மா லட்சுமி பெயரை வைக்க முடிவு செய்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி சிபாரிசு
நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்திருக்கிறாராம். லவ் ஆக்ஷன் சப்ஜெட்டான இதில் இளம் ஹீரோ நடிக்கிறார், அவர் யார் என்பதை இந்த மாத இறுதியில் தெரிவிக்க உள்ளாராம். ஹரிதாஸ் படத்துக்கு இசை அமைத்த விஜய் ஆண்டனி நடிப்பில் பிஸியாகிவிட்டதால் இப்படத்துக்கு இசை அமைக்க 3 இசை அமைப்பாளர்கள் பெயரை விஜய் ஆண்டனி பரிந்துரைத்திருக்கிறாராம். அதில் ஒருவரை இயக்குனர் தேர்வு செய்ய உள்ளார்.