பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
பாலசூர்:ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இன்று காலை பிருத்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
அணுகுண்டுகளை ஏந்தி சென்று 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரியின் இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட பிருத்வி 2 ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகை ஏவுகணைகளின் தயார் நிலையை உறுதி செய்வதற்காக அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த டிசம்பர் 20ம் தேதி பிருத்வி 2 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இதில் முழு வெற்றி காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பிருத்வி 2 ஏவுகணை மீண்டும் சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை தளத்தில் மொபைல் லாஞ்சரிலிருந்து பிருத்வி 2 ஏவுகணை சரியாக காலை 9.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் பாதையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் மானிட்டரில் கண்காணித¢தனர். திட்டமிட்ட பாதையில் சரியாக சென்ற ஏவுகணை 350 கிலோ மீட்டருக்கு அப்பால் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்கை சரியாக தாக்கியது. சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் டிஆர்டிஒ விஞ்ஞானிகள் கூட்டாக தெரிவித்தனர். 1000 கிலோ வரையிலான எடையை தாங்கி செல்லும் இந்த வகை ஏவுகணைகளில் திரவ எரிபொருளில் இயங்கும் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.