சென்னை: கோடநாட்டில் தங்கியிருந்தாலும் அரசு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு மாதத்திற்கு மேலாக முதல்வர், தலைநகர் சென்னையில் இல்லை என்றும், சில கொலை, கொள்ளைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி இதுகுறித்து எந்த பத்திரிகையும் செய்தி வெளியிடவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். பிரச்னைகளுக்கு உடனுக்குடன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை மட்டும்தான் மக்களும், பத்திரிகையாளர்களும் பார்ப்பார்கள். முதல்வர், அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி முடிவெடுத்தாரா? அந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டதா? முதல்வரின் இல்லத்தில் நடத்தப்பட்டதா? முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டதா? முதல்வர் யார் யாருடன் விவாதித்தார் என்பதையெல்லாம் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும், அதன் மீது தீர்க்கமான, தன்னலமில்லாத, நியாயமான, பாரபட்சமற்ற முடிவை முதல்வர் எடுக்கிறாரா என்பது தான் முக்கியமே தவிர, அந்த முடிவு எந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல.
நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் சில நாட்கள் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை நான் மேற்கொள்வேன் என்ற செய்தி தமிழக அரசின் செய்திக் குறிப்பு மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கோடநாடு என்பது தமிழகத்தின் ஒரு பகுதி. அங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். அப்பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா? கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை, கர்நாடகத்தில் இருக்கிறதா? நான் சில நாட்கள் கோடநாட்டில் தங்கி இருந்தாலும், அன்றாட அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
கோடநாட்டில் தங்கியிருந்த நாட்களில் நான் செய்த அரசு பணிகள் அனைத்தையும் பட்டியிலிட விரும்பவில்லை. சில முக்கிய பிரச்சனைகளுக்கு எடுத்த நடவடிக்கைகளை கூறுகிறேன். என்.எல்.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அந்த பங்குகளை வாங்க நடவடிக்கை எடுத்தேன். மேலும், ஈரான் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதோடு, மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டேன். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறேன்.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளேன். கோடநாட்டில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் பல முறை தொலைபேசியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருடனும், டிஜிபியுடனும், பிற அரசு அதிகாரிகளுடனும் பேசிக்கொண்டு இருந்தேன். அதனால்தான் பல பிரச்சினைகளில் உடனுக்குடன் விவாதித்து துரித முடிவுகள் எடுத்து செயல்படுத்த முடிந்தது. பா.ஜ. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். பின்னர், இது குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் கடந்த மாதம் 25ம் தேதி கோடநாட்டில் ஆய்வு கூட்டம் நடத்தினேன்.
கலப்புத் திருமணம் செய்த தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்தவுடன் சாதி மோதல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டேன். இதுகுறித்து ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டேன். ஒகேனக்கல் வெள்ளத்தில் சிக்கிய 4 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்க உத்தரவிட்டேன். எனவே, தலைநகரிலேயே எப்பொழுதும் முதல்வர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்தாலும், மக்கள் நலனுக்கான துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.