கம்பம் அருகே பயங்கரம் தேமுதிக நிர்வாகி, பெண் கொலை
கம்பம்:கம்பம் அருகே தேமுதிக நிர்வாகி கொலை செய்யப்பட்டார். அதே பகுதியில் பெண் ஒருவர், கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயண தேவன்பட்டியை சேர்ந்தவர் சின்னமுருகன் (38). இவர் தோட்ட வேலைக்கு சென்று வந்தார். மேலும், தேமுதிக ஒன்றிய துணை செயலாளராகவும் இருந்தார். இன்று அதிகாலை நாராயண தேவன்பட்டியில் இருந்து சுருளி அருவி செல்லும் பாதையில் சுருளியாண்டவர் கோயில் அருகே முகம் சிதைந்த நிலையில் இவர் இறந்து கிடந்தார்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ராயப்பன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சின்னமுருகன் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சின்ன முருகனுக்கு, மனைவி சுமதி, 2 குழந்தைகள் உள்ளனர்.
பெண் கொலை: கம்பம் அருகே சுருளிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (45). இவரது மனைவி செல்வி (35). ராஜா ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று அதிகாலை மனைவி செல்வியை, ராஜா கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் தற்கொலை செய்ய நினைத்து, தன் கழுத்தை அறுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த ராயப்பன்பட்டி போலீசார் ராஜாவை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜா 2 ஆண்டுக்கு முன்பே செல்வியை கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்து மீண்டும் செல்வியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் மனைவியை கொலை செய்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.