நாகை:இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 65 பேரை விடுதலை செய்ய கோரி படகில் கறுப்பு கொடி ஏற்றி நடுக்கடலில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 65 மீனவர்களை கடந்த 30ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை கண்டித்தும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் கடந்த 1ம் தேதி முதல் நாகை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 9வது நாளாக நாகை தாலுகா மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில், மீனவ பஞ்சாயத்து முடிவின்படி, நாகூர், நாகூர் பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர், ஆரியநாட்டு தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் கறுப்பு கொடிகளை கட்டி, நாகை துறைமுகம் அருகில் உள்ள பழைய மீன் இறங்கு தளத்தில் இருந்து 50 அடி தூரத்தில் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரையில் மீனவ பெண்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் வாடும் காரைக்கால் மீனவர்கள் 31 பேரையும் விடுதலை செய்ய கோரி 11 கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 700 பைபர் மற்றும் விசை படகுகளில் கறுப்பு கொடிகளை கட்டி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்றனர். நடுக்கடலில் நங்கூரமிட்டு போராட்டம் நடத்தினர். கடற்கரையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழையாறு துறைமுகத்தில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டு துறை, தரங்கம்பாடி, கொள்ளிடம் கடல் பகுதிகளிலும் மீனவர்கள் போராட்டம் செய்தனர்.