முத்துப்பேட்டையில் கலவரம்: 200 பேர் மீது வழக்கு போலீசார் குவிப்பு
முத்துப்பேட்டை:முத்துப்பேட்டையில் இருதரப்பினர் மோதி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையை சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம். பாஜ மாநில செயலாளர். இவருக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி முருகானந்தத்தை ஜாம்புவானோடையில் இருந்து முத்துப்பேட்டைக்கு கட்சியினர் ஊர்வலமாக அழைத்து சென்றனர். ஆசாத் நகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பட்டாசு வெடித்து சென்றனர். அருகில் மற்றொரு தரப்பினரும் பட்டாசு வெடித்தனர். அவர்களை எஸ்ஐ ஒருவர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பா.ஜ ஊர்வலத்துக்கு போட்டியாக மற்றொரு தரப்பினர் பைக்குகளில் ஊர்வலமாக பெரிய கடை தெருவில் இருந்து புறப்பட்டு புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர். போலீஸ் நிலையம் பகுதியில் வந்த போது போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் பைக்குகளில் ஊர்வலமாக வந்தவர்கள் மீது கற்கள் வந்து விழுந்தன. பதிலுக்கு ஊர்வலத்தில் வந்தவர்களும் கல் வீசினர். அப்போது பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பலரது கடைகள் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் கலவரம் வெடித்தது. பயணிகள், பொதுமக்கள் அலறி ஓடினர்.
இதில் தஞ்சையை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர தடியடி நடத்தினர். திருவாரூர் எஸ்.பி காளிராஜ் மகேஷ் குமார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதற்கிடையே பாஜவினர் மீது புகார் கொடுக்க மற்றொரு தரப்பை சேர்ந்த 3 பேர் போலீஸ் நிலையம் சென்றனர். அவர்களை போலீசார் பிடித்து வைத்து கொண்டதால், ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி 3 பேரையும் விடுவித்தார்.இதற்கிடையே அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக இருதரப்பையும் சேர்ந்த 200 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.