வாஷிங்டன்:அமெரிக்காவில் ஆசாமி ஒருவன் தனது மனைவியை கொன்று அதை படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் உள்ள மியாமி என்ற இடத்தை சேர்ந்தவர் டெரக் மெடீனா (31). இவரது மனைவி ஜெனிபர் அல்போன்சா (26). டெரக் மெடீனா டிவி நடிகர். மேலும் பல்வேறு தன்னம்பிக்கை நூல்களையும் எழுதியுள்ளார். ‘சிலரின் வாழ்வை நான் காப்பாற்றுவது எப்படி?’, ‘கணவன் மனைவி இடையே தகவல் இடைவெளியால் திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள்’ போன்ற பல்வேறு தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். டெரக் மெடீனா தனது மனைவியை கொன்று, கொலை செய்யப்பட்ட மனைவி உடலின் புகைப்படங்களை பேஸ் புக்கில் வெளியிட்டார்.
அதில் ‘நண்பர்களே இதற்காக நான் சிறை தண்டனையோ அல்லது மரண தண்டனையோ பெற நேரிடலாம். நான் உங்களை விட்டு செல்கிறேன். இனி என்னை செய்திகளில் பாருங்கள்’ என எழுதியிருந்தார். இந்த படங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் வீட்டில் இருந்து வெளியேறிய டெரக் மெடீனா அருகில் இருந்த தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், ‘கொலை செய்து விட்டு என்னை வந்து சந்தித்தான். எனது மனைவி கத்தியை காட்டி மிரட்டியதால் அவளை கொலை செய்து விட்டேன் என்று கூறினான். அவனை மியாமி காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் என்றார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டெரக் மெடீனாவின் மனைவி அல்போன்சாவின் உடலை கைப்பற்றினர். மேலும் வீட்டில் இருந்த 10 வயது சிறுமி ஒருத்தியையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவளுக்கு காயம் ஏதும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். சொந்த பிரச்னை காரணமாக டெரக் மெடீனா தனது மனைவியை சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. ஏற்கனவே அல்போன்சாவுக்கு மகள் ஒருத்தியும் இருப்பதும், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் நினைத்திருந்தார். இதற்கிடையில் விவாகரத்து செய்துகொண்ட அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்த போது சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் அல்போன்சா கத்தியை காட்டி மிரட்டவே, அவளை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் டெரக் மெடீனா துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.