பெண்கள் வங்கிக்கு அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: பெண்களுக்கான பிரத்யேக வங்கி அமைக்கப்படும் என பட்ஜெட்டின் போது மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் பெண்கள் வங்கிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பாரதிய மகிளா வங்கி என்ற பெயரில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின்படி முதற்கட்டமாக 6 கிளைகள் தொடங்கப்படும். இந்த வங்கிகள் மூலமாக மகளிருக்கு தேவையான நிதி சேவைகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி சேவைகள், தொழில் முதலீட்டு சேவைகள் வழங்கப்படும். அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டு இது அமல்படுத்தப்படும். அதன்பின் வரும் நவம்பர் முதல் வங்கிகள் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.