கோவை:ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் துணை மேலாளரை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில் ஆவின் மார்க்கெட்டிங் பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு துணை மேலாளராக சூலூரை சேர்ந்த தங்கவேல்(56) பணியாற்றி வருகிறார். இவர் ஆவின் பால் பூத்துகளில் நடைபெறும் புகார்கள், முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார்.
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார்(37). இவர் ஒலம்பஸ் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆவின் பூத் ஏஜென்டாக உள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை தங்கவேல், ஒலம்பஸ் பகுதியில் உள்ள உதயக்குமாரின் பூத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், உதயக்குமாரிடம், “உங்கள் பூத் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆவின் நிர்வாகத்தின் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது. எனக்கு ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தால் அந்த நிலுவை வழக்கை முடித்து விடுகிறேன்,‘‘ என கூறினார். இதைக்கேட்ட உதயக்குமார் மறுத்துள்ளார். ‘ரூ.5 ஆயிரம் பணம் வேண்டாம், ரூ.3 ஆயிரம் பணம் கொடு’ என தங்கவேல் வற்புறுத்தியுள்ளார். பணம் தருவதாக கூறி அவரை அனுப்பி விட்டு கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
நேற்று மதியம் தங்கவேலின் அலுவலகத்திற்கு சென்ற உதயக்குமார், போலீ சார் கூறியபடி ரசாயனம் தடவிய நோட்டுகளை அவரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம், மசூதாபேகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தங்கவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.