தண்டையார்பேட்டை:அடிக்கடி மின்தடை கண்டித்து தண்டையார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சோலையப்பன் தெரு, வீராகுட்டி தெரு, டி.ஹெச். ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் இந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. உடனே மின்தடை நீக்குதல் பிரிவுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டனர். யாரும் போனை எடுக்கவில்லை. உடனே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து முறையிட்டனர். முறையாக பதிலளிக்காததால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் வேதரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் சிவமணி, தெய்வசிகாமணி ஆகியோர் விரைந்து வந்து பேச்சு நடத்தினர். ‘அடிக்கடி மின் தடை நடப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறினர். மேலும் எங்களது புகாரை மதிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பல இடங்களில் நேற்று இரவு மின்தடை
சென்னையில் தண்டையார்பேட்டை, கடப்பேரி, கொரட்டூர், தரமணி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் பெரிய அளவில் (230 கே.வி திறன்கொண் டது) மின்சார துணை மின்நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், தண்டையார்பேட்டை இருக்கும் துணை மின்நிலையத்தில் (230 கேவி திறன் கொண் டது) நேற்று இரவு திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், தண்டையார் பேட்டை, எழும்பூர், புதுப் பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டையில் ஒரு பகுதி, திருவல்லிக்கேணி, நந்தனத்தில் ஒரு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு 10 முதல் 12 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது.
இதே போல் புறநகர் பகுதியான பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 12 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தைகளும், வயதானவர்களும் தூங்க முடியாமல் தவித்தனர்.