சீரமைத்த 3 மாதத்தில் சிதைந்தது வேங்கைவாசல்&கோவிலஞ்சேரி சாலை
தாம்பரம்:புனித தோமையர் மலை ஒன்றியத்திற்கு உட்பட்டது வேங்கைவாசல் கிராமம். இங்கு வசிக்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைக்கு செல்லவும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும், வேங்கைவாசல்& கோவிலஞ்சேரி சாலையையே பயன்படுத்துகின்றனர். இவ்வழியாகத்தான் மதுரைப்பாக்கம், சித்தாலப்பாக்கம், சந்தோஷபுரம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த சாலை புனித தோமையர் மலை ஒன்றியம் சார்பில் 2012&13ம் ஆண்டு 13வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ12.72 லட்சம் மதிப்பீட் டில் கடந்த 3 மாதங்களுக்குமுன் புதுப்பிக்கப்பட்டது. இச்சாலையின் பெரும்பாலான பகுதிகள் சமீபத்திய மழையால் சிதிலமடைந்து விட்டது.
இதுகுறித்து வேங்கைவாசல் மக்கள் கூறுகையில், ‘போதுமான அழுத்தம் கொடுக்காததால் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மேலும் மூலப்பொருட்களின் அளவு குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியாக மேற்பார்வை செய்யவில்லை. சாலை அமைக்கப்பட்ட விவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.