கொல்கத்தா பல்கலை.யில் காதல் பாடம் மாணவ, மாணவிகளுக்கு புத்தாண்டு ‘பரிசு’
கொல்கத்தா:கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்றது. இந்த பல்கலை.யில் வரும் புத்தாண்டு முதல் சமூகவியல் பாடத் திட்டத்தில் காதல் பாடம் சொல்லித் தரப் படும் என துணை வேந்தர் மலாபிகா சர்க்கார் கூறினார். அவர் கூறியதாவது:
பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பாடத் திட்டத்தில் வரும் புத்தாண்டு முதல் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இளைஞர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்ற வகையில் சமூகத்தை புரிந்து கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில் ஒன்றாக, காதல் பாடம் சேர்க்கப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தின்படி காதல் பற்றி அறிவுப்பூர்வமான வகையில் சமூகவியல் பார்வையோடு சொல்லித் தரப்படும். இதில் காதல் பற்றிய சமூக மதிப்பீடுகள், அதனால் ஏற்படக் கூடிய பிரச்னைகள், பொருளாதார, கலாச்சார பார்வைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டு ஜூலை முதல் வகுப்புகள் தொடங்கும். பாரம்பரியமும், கலாச்சாரமும் நிறைந்த இந்திய நாட்டில் காதலை புரிந்து கொள்வதற்கான முதல் முயற்சியாக காதல் பாட வகுப்புகள்தொடங்கப் படுகின்றன.
இவ்வாறு சர்க்கார் தெரிவித்தார்.கலை மற்றும் அறிவியல் துறையில் படிக்கும் பட்டதாரி மாணவர்கள் தங்களது விருப்ப பாடமாக காதல் பாடத்தை எடுத்து படிக்கலாம். இதனை சமூகவியல் துறை உருவாக்கியுள்ளது என்கிறார் சமூக துறை பேராசிரியர் ராய் சவுத்ரி. அறிவியல் படிக்கும் மாணவர்கள் தங்களது விருப்ப பாடமாக முதல்முறையாக கலை பாடத்தை விருப்ப பாடமாக படிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார். இந்த பாடத்திட்டத்துக்கு மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும் என்கிறது பல்கலை வட்டாரம்.