திருப்பதி: ஆந்திர மாநிலம் ஐதராபாத் மசாப்பு டேங்க் பகுதியில் ஜவகர்லால் நேரு பைன் ஆர்கிடெக்சர் அரசு பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஓவியத் துறை தலைவராக ஸ்டேன்லி சுரேஷ் என்பவர் பணிபுரிந்தார். மாணவிகளிடம் இவர் ஆபாசமாக பேசுவதாவும், திருமணமான பெண்கள், வயது அதிகமான பெண்களிடம் இந்த வயதில் ஏன் படிக்க வருகிறீர்கள், நீங்கள் வராவிட்டால் இளம்பெண்கள் படிக்க வருவார்கள் என தரக்குறைவாக பேசுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டேன்லியை ஓவியத் துறை தலைவர் பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்தனர். அதன்பின் அவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டேன் என்று 2012ம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் எழுதி கொடுத்தார். அதன்பின், அவருக்கு மீண்டும் ஓவியத் துறை தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதன்பின்னரும், ஸ்டேன்லி சுரேஷ் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை காட்டி வர்ணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பல்கலைக்கழக துணை வேந்தர் பத்மாவதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டனர்.
இதை பல்கலை நிர்வாகம் கண்டு கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நேற்றுமுன்தினம் துறை தலைவர் ஸ்டேன்லி சுரேஷ் தங்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும், அதை மாணவிகள் தட்டி கேட்டால், செய்முறைக்கான மதிப்பெண் அளிக்க மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் கூறி பல்கலைக்கழகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, ஆதரவாக பிற துறை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த, துணை வேந்தர் பத்மாவதி, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மாணவிகள் ஸ்டேன்லி சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று உறுதியாக கூறினர். இதையடுத்து, பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்து துணை வேந்தர் விசாரணை நடத்தினார். அதில், ஸ்டேன்லி சுரேஷ் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து அவரை உடனடியாக ஓவியத் துறை தலைவர் பதவியில் இருந்து நீக்கி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பின் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.