ம.பி. சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50% இடங்கள் முதல்வர் சவுகான் அறிவிப்பு
போபால்: மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மட்டும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டம் வகை செய்கிறது. பல மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி வருகின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில்தான் முதன்முறையாக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்க சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் முடிவு செய்துள்ளார். ஹோஷங்காபாத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இந்த அறிவிப்பை சவுகான் வெளியிட்டார். ஆண்கள் வீட்டில் இருக்க பெண்கள் ஆட்சி செய்யும் நேரம் வந்து விட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து மாநில பாஜ தலைவர் நரேந்திரசிங் தோமர் கூறுகையில், ‘‘வெற்றி பெறுவதற்கான தகுதிகளை கொண்ட பெண்களுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும். ஆணா, பெண்ணா என்பது முக்கியமல்ல. வெற்றியை தேடி தரக்கூடிய வேட்பாளர்கள் தான் முக்கியம்’’ என்றார்.